

12 நாட்கள் கடினமாக இருந்தாலும் பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. காவல்துறை எப்போதும் மக்களின் நண்பன்தான் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னையில் 12 நாள் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலாவதை ஒட்டி கடும் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் போலீஸார் சோதனையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“சென்னை பெருநகரில் ஓரிரு இடங்களில் பத்திரிகை நண்பர்கள், அரசுப் பணியாளர்களிடம் சோதனையின்போது காவல்துறையினர் கடுமையாக நடப்பதாக செய்தி வருகிறது. அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் சரி செய்துவிடுவோம். ஆகவே, இது ஒரு கடுமையான காலகட்டம். போலீஸார் நடவடிக்கை பொதுமக்களின் நண்மைக்காகவே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னையில் அனைத்து உயர் அதிகாரிகளும் ஏரியாவில் ரோந்துப் பணியில்தான் உள்ளோம். நகரின் உட்பகுதிகளில் பொதுமக்கள் வெளியில் சுற்றுவது தெரிந்து அதைக் கண்காணித்து அறிவுரை சொல்லி அனுப்பி வருகிறோம். 12 நாட்கள் முழு ஊரடங்கு பொதுமக்களுக்கு கடினமாகத்தான் இருக்கும். இந்தக் கஷ்டத்தைப் பொதுமக்கள் தாங்கிக்கொண்டால் அடுத்து வரும் காலங்களில் நோய்த்தொற்று குறையும். இந்தக் கடுமையான 12 நாட்களைப் பொறுத்துக்கொண்டால் உடனடியாக தொற்று போக வாய்ப்புள்ளது. இயல்பு நிலை திரும்ப வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டுப்படுகள் பொதுமக்களுக்கு எதிரானவை அல்ல. காவல்துறையின் கட்டுப்பாடுகள் சில நேரம் கடுமையாகத் தெரியும், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இது தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிரான ஒன்று அல்ல. இதன் மூலம் நோய்த்தொற்று குறையும் என்பதால் இந்த நடவடிக்கை. மற்றபடி காவல்துறை எப்போதும் மக்களின் நண்பன்தான்.
இன்றைய தளர்வு இல்லாத ஊரடங்கில் எதற்கும் அனுமதி இல்லை. நாளை முதல் முழு ஊரடங்கு தொடரும். பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைக்கூட வாரத்தில் ஒருநாள் வெளியில் வந்து மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம். தினமும் வெளியே வரவேண்டிய அவசியமில்லை எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள், எச்சரிக்கப்படுகிறார்கள். ஒரு சில இடங்களில் வழக்கும் போடுகிறோம்''.
இவ்வாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.