

கரோனா வேகம் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. ஐந்து நாட்களில் மூன்றாவது நூறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட பொறுப்பான நடத்தையால் மட்டுமே பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் கடினமான சூழலில் இருப்போம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி 31 பேருக்குத் தொற்று உறுதியாகி 369 ஆக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இச்சூழலில் புதுச்சேரியில் கரோனா வைரஸ் பாதை என்று குறிப்பிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வீடியோ, வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:
புதுச்சேரியில் முதல் 81 நாட்களில் முதல் நூறு கரோனா வைரஸ் தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது நூறு வைரஸ் தொற்றாளர்கள் உருவாக 10 நாட்களானது. அதே நேரத்தில் மூன்றாவது நூறு கரோனா பாதிக்கப்பட்டோர் உருவாக ஐந்து நாட்களே ஆகியுள்ளது. தனிப்பட்ட பொறுப்பான நடத்தை மட்டுமே பரவலின் வேகத்தை தடுக்க முடியும்.
கரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால் புதுச்சேரியில் மக்கள் அனைத்து எண்ணிக்கையிலும் கடினமான சூழலில் இருப்போம்.
பாதிப்பு அதிவேகமாக பரவ தனிநபர் பழக்கவழக்கமே முக்கியக் காரணம். முகக்கவசம் சரியாகப் பயன்படுத்துவதில்லை. பலரும் கைக்குட்டையை முகக்கவசமாகப் பயன்படுத்துகின்றனர். இது தவறு. கைக்குட்டை முகக் கவசமாகாது. பொது இடங்களில் பேசுவோர் முகக் கவசத்தைப் பயன்படுத்துவதில்லை இது தவறு.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிமனிதருக்கும் பொறுப்பும் பங்கும் உண்டு. ஆனால் பலர் முகக்கவசம் பயன்படுத்தாமல் தங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். நமது ஒன்றிணைந்த முயற்சிகளால்தான் கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விதிமீறும் முதியோர் சுட்டிக்காட்டும் கிரண்பேடி
புதுச்சேரி கடற்கரை சாலை தற்போது நடைப்பயிற்சிக்காக திறக்கப்பட்டுள்ளது. அங்கு முதியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் படத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டு இது விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ளார். முதுமை என்பது வயது அதிகரிப்பால் வரும் வேளையில் புரிதல் இல்லாமல் செயல்படுவது மற்றவர்களை மிகவும் பாதிக்கக்கூடும் என்பதை அறிதல் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.