

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 245 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 101 பேர் குணமடைந்துள்ளனர். 142 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரியான 54 வயது பெண், சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகப் பணியாளர் 3 பேர், கீழக்கரையில் 9 பேர் உட்பட 38 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை யடுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவர் 2 வாரங்களுக்கு முன்புதான் மதுரையிலிருந்து பணி மாறுதலாகி ராமநாதபுரத்தில் பொறுப்பேற்றார்.
ஏற்கெனவே வருவாய் அலுவலக பெண் ஊழியர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். இதுவரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
300 பேர் பாதிப்பு?
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 300-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசு தலைமை மருத்துவமனை நவீன ஆய்வகம் மூலம் கூறப்பட்டு, அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
ஆனால் தமிழக சுகா தாரத்துறை இதுவரை 245 பேர் மட்டும் பாதிக்கப்பட்டதாகவும், 2 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தில் இதுவரை 5 பேர் உயிரி ழந்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் மரணம்
முதுகுளத்தூரைச் சேர்ந்த 84 வயது வழக்கறிஞருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது. அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில் நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.