

வானியல் அபூர்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று (ஜூன் 21) நிகழ்கிறது. இந்த கிரகணத்தை தகுந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும்ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுகிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனைமறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம்எனவும் அழைக்கப்படுகிறது.
அந்தவகையில் ஆப்பிரிக்கா,ஆசியாவின் பல பகுதிகளில் இன்று(ஜூன் 21) அபூர்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் நிகழஉள்ளது. சூரியனை முழுமையாகநிலவு மறைத்தால் அது முழு சூரியகிரகணம். மையப்பகுதியை மட்டும்மறைத்து விளிம்பில் நெருப்பு வளையம் போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணமாகும்.
இதுகுறித்து தமிழ்நாடு பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர்எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது: வளைய சூரிய கிரகணத்தைசவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்க நாடுகள், தென்சீன பகுதிகள், வடஇந்தியாவின் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட்ஆகிய மாநிலங்களில் காணலாம். காலை 10.12 மணிக்கு தொடங்கும் கிரகணம் மதியம் 12.10-க்கு உச்சநிலை அடைந்து, 2.02 மணிக்கு முடிவடையும்.
அதேநேரம் தமிழகம் உள்ளிட்ட தெற்காசிய பகுதிகளில் பகுதி கிரகணமாகவே தென்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி,கன்னியாகுமரி, வேலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் காலை 10.12 முதல் 1.45 வரைகிரகணம் நடைபெறும். 11.45 முதல்12 மணி வரை உச்சநிலை அடையும். அப்போது அதிகபட்சமாக சென்னையில் 34 சதவீதம் வரை கிரகணம்தெரியக்கூடும். கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களாலோ தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே சீட்டுகளை கொண்டோ பார்க்கக் கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு ஏற்பாடுகள்
இதற்கிடையே கிரகணத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்வையிட தமிழ்நாடு அறிவியல்இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சுப்ரமணி கூறும்போது, ‘‘கிரகணத்தை மக்கள் பாதுகாப்பாக பார்வையிட அறிவியல் இயக்கம் சார்பில் 10 ஆயிரத்துக்கும்மேற்பட்ட சூரிய கண்ணாடிகள்வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 500 இடங்களில் கிரகணத்தை பாதுகாப்பாக பார்வையிடவும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
சென்னையில் திடீர் சூரிய ஒளிவட்டம்
சென்னையில் நேற்று திடீரென சூரியனை சுற்றி பெரிய அளவில் ஒளி வட்டம் தெரிந்தது. அது சூரிய கிரகணமோ என பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறும்போது, ‘‘வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மிக உயரத்தில் மேகங்கள் அறுகோண பட்டக வடிவில் பனிக்கட்டித் துகள்களாக இருக்கும்போது, அதன் மீது படும் சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும். அதை ‘குறைந்தபட்ச ஒளி விலகல் கோணம்’ என்கிறோம். அப்போது சூரியனை சுற்றி ஒளி வட்டம் ஏற்படும். இதற்கும், சூரிய கிரகணத்துக்கும் தொடர்பில்லை’’ என்றார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறும்போது, ‘‘இவ்வாறு சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படுவதை, நமது முன்னோர் ‘அகல் வட்டம்’ என்பார்கள். ‘அகல் வட்டம் - பகல் மழை’ என்ற பழமொழியும் உள்ளது. கோடைகாலத்தில் மழை மேகங்கள் மிக உயரத்தில் செல்லும்போது பனிக்கட்டி துகள்களாக மாறும். அப்போது வெப்பச் சலனம் ஏற்பட்டால் மழையாக பெய்யும். அவ்வாறு பனிக்கட்டிகள் உருவாகும்போது, இதுபோன்ற ஒளி வட்டம் ஏற்படுகிறது. இதனால், அன்றைய தினம் அல்லது அடுத்த சில தினங்களில் மழை பெய்வதுண்டு’ என்றார்.