Published : 20 Jun 2020 09:07 PM
Last Updated : 20 Jun 2020 09:07 PM

மருத்துவர்களைத் தண்டித்தது போதும்; முந்தைய பணி இடத்தைக் கொடுங்கள்: அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்  

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

எந்தக் காரணமும் இன்றி மருத்துவர்களை இதுவரை தண்டித்தது போதும் என்ற முடிவோடு, தண்டிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு முந்தைய பணி இடம் கிடைக்கச் செய்வதோடு, கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 40 வயதுப் பெண் மல்லிகாவை மே 25-ம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மல்லிகா, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, சுமார் 30 மணி நேரம் நெஞ்சுப்பகுதியில் இருந்த கத்தியைப் பாதுகாப்பாக அகற்றினர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கூறும் போது, இது அபூர்வமான நிகழ்வு. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் 6 அங்குல அளவுக்கு கத்தி இறங்கியிருந்தது. ஒரு அங்குல கைப்பிடி மட்டுமே வெளியே தெரிந்தது.

எனினும் கத்தியால் நுரையீரல் தவிர, மற்ற உறுப்புகள் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து உறுப்புகள் பாதிக்காத அளவுக்கு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கத்தி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரிசெய்யப்பட்டது எனத் தெரிவித்தார்கள்.

நெஞ்சுக்குள் கத்தியுடன் பல மணி நேரங்கள் வலியுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்றிய கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவக் குழுவினரைப் பாராட்டுகிறோம்.

இருப்பினும் சேலத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இதய அறுவை சிகிச்சை துறை மூடப்பட்டுள்ளதால், ஓசூரிலிருந்து சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளியை, உயிருக்குப் போராடும் நிலையில், மறுபடியும் கோவைக்கு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் இருந்திருந்தால், அங்கேயே அறுவை சிகிச்சை செய்திருக்க முடியும். மேலும் ஒருவேளை கோவை செல்லும் வழியில் நோயாளியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் அரசு அவர்கள் குடும்பத்திற்குப் பதில் சொல்ல முடியுமா?

டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை

அதாவது சேலத்தில் இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மருத்துவர் பொன்ராஜராஜனை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஊட்டிக்கு தண்டனை இடமாற்றம் செய்ததால், சேலம் மற்றும் அருகாமையிலுள்ள 6 மாவட்டங்களில் உள்ள மக்கள், இதுபோன்ற அவசர சிகிச்சை மற்றும் இதய, நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு வழி இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள். அதாவது டாக்டர் மட்டுமல்ல நோயாளிகளும் இங்கே தண்டனை அனுபவித்து வருகிறார்கள். சேலத்தில் இந்தத் துறையினர் பயன்படுத்தி வந்த அறுவை அரங்கை (OT)வேறு துறைக்கு ஒதுக்கி விட்டார்கள். மேலும் இந்தத் துறையிலிருந்த கருவிகள் பெரும்பாலும் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன

இதற்கிடையே இடமாற்ற உத்தரவை அரசு கடந்த வாரம் ரத்து செய்திருந்த போதும், மருத்துவர் பொன் ராஜராஜனை, சேலத்தில் அவருடைய முந்தைய பணி இடம் காலியாக இருந்தும், வேண்டுமென்றே திருச்சிக்கு மாற்றியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் சென்னையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு, முந்தைய பணி இடங்கள் காலியாக இருந்தும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கரோனா பரவலையொட்டி பிற மாவட்டங்களில் பணியாற்றி வந்த மருத்துவர்களை அதிக அளவில், சென்னையில் அமர்த்தியுள்ள அரசு, சென்னையிலிருந்த மூத்த மற்றும் சிறப்பு மருத்துவர்களைத் தொடர்ந்து தண்டிப்பதற்காக, பிற மாவட்டங்களில் பணியமர்த்துவது எந்த வகையில் நியாயம்?

அதுவும் கரோனா சமயத்தில் கூட, அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தராமல், அரசு நம் வயிற்றில் அடிப்பது மாபாவம் என்பதை உரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அரசு, எந்தக் காரணமும் இன்றி மருத்துவர்களை இதுவரை தண்டித்தது போதும் என்ற முடிவோடு, தண்டிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு முந்தைய பணி இடம் கிடைக்கச் செய்வதோடு, கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு டாக்டர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x