வருவாய் ஆய்வாளருக்குக் கரோனா தொற்று: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் மூடல்

வருவாய் ஆய்வாளருக்குக் கரோனா தொற்று: சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் மூடல்
Updated on
1 min read

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர் கடந்த சில நாட்களாக நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் குறித்து கண்காணிப்பு மற்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த 14-ம் தேதி வரை அந்தப் பணியில் இருந்த அவருக்கு சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனையடுத்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை அவர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இதனால் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டாட்சியர் அலுவலகம் இன்று மூடப்பட்டது. அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக வட்டாட்சியர் அலுவலகம் வந்துசென்ற பொதுமக்களையும் கண்டறியும் பணியும் தொடங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் போல சீர்காழி வட்டாட்சியர் அலுவலகமும் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in