

கரோனா சரியாக இன்னும் எத்தனை மாதமாகும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதை உலக சுகாதார நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.
மதுரை ஆண்டாள்புரத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 20) நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மதுரை மாநகராட்சியில் இதுவரை சுமார் 1 லட்சம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் மருத்துவப் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று வந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், ஊர்ப் பெயர்களை தமிழில் மாற்றிய உத்தரவை ஏன் திரும்பப் பெற வேண்டும், வல்லுநர்களிடம் கருத்து கேட்டுச் செய்திருக்கலாமே என்று ஸ்டாலின் கூறியது குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அந்த அரசாணை வெளியிடும்போது பல்வேறு கருத்துகள் மக்களிடம் இருந்து வந்தது. அந்தக் கருத்துகளை முதல்வர் ஆய்வு செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அதனடிப்படையில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. ஒரு புதிய திட்டங்களை அறிவிப்பதும், மக்களிடம் கிடைக்கக்கூடிய வரவேற்பைப் பொறுத்து அதற்குத் தகுந்தவாறு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதுபோலவே தமிழில் ஊர்ப் பெயரை மாற்றும் திட்டத்திற்கு பல மாதங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது மக்களிடம் இருந்து வந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டு இன்னும் மேம்படுத்தி எல்லோரும் வரவேற்கக்கூடியவகையில் மீண்டும் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
மேலும், அமைச்சர் உதயகுமார் தொடர்ந்து கூறுகையில், "கரோனாவைப் பார்த்து மக்கள் 100 சதவீதம் அச்சப்பட தேவையில்லை. ஆனால், அவசியம் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் பலர் முகக்கவசம் அணிவதே இல்லை. அதனால், மக்களுக்கு விழிப்புணர்வு செய்கிற சவாலை எதிர்கொண்டுள்ளோம். எந்தெந்த நாடுகளில் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்கிறார்களோ அந்த நாடுகள் மிக விரைவிலே கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளன.
கரோனா என்பது உலக அளவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடர். அதற்காக தேசிய அளவில் பொது சுகாதாரத்துறை அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதற்கு மக்களும், எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க எத்தனை மாதமாகும் எனக் கேட்டனர். அதற்கு அமைச்சர் உதயகுமார், "உலக சுகாதார நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும். மிக விரைவிலே மீண்டு வருவோம் என்று நம்பிக்கை வைப்போம்’’ என்று தெரிவித்தார்.