

இ-பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்துவந்து பணியமர்த்திய பிரபல நகைக் கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை காந்திபுரம், கிராஸ் கட் சாலையில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை கிளையிலிருந்து 30 ஊழியர்களை இ-பாஸ் இல்லாமல் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் இன்று (ஜூன் 20) காலை அந்த நகைக் கடையில் சோதனையிட்டனர். அப்போது, இ-பாஸ் இல்லாமல் ஊழியர்கள் வந்தது உறுதியானது.
இதையடுத்து, நகைக்கடையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர், ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட மொத்தம் 193 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் கூறும்போது, "சென்னையிலிருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நேரடியாகக் கடைக்கு வந்து பணியாற்றியுள்ளனர். இதனால், கடைக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் நாளை கிடைக்கும்" என்றனர்.
3 மாடியில் 160 ஊழியர்களுடன் கடை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.