

நாகர்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறையை மீறி அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் சென்னையில் இருந்து வந்தவர்களைத் தங்க வைத்திருந்த தங்கும் விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து இ-பாஸ் இன்றி வருவோர், மற்றும் ரகசியமாக விடுதிகளில் அறை எடுத்து தங்குவோரால் கரோனா பரவி வருவது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைக்குப் புறம்பாக மாவட்டத்திற்குள் நுழைவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளத்தில் உள்ள தங்கும் விடுதியில் அரசு அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் சென்னையில் இருந்து பலர் தங்கி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் புகார் வந்தது. இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் சரவணகுமாருக்கு வலியுறுத்தப்பட்டது. ஆணையரின் உத்தரவின் பேரில் இன்று (ஜூன் 20) மாநகராட்சி நல அலுவலர் கிங்சால் தலைமையில் அதிகாரிகள் செட்டிகுளத்தில் உள்ள தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, சென்னையில் இருந்து காரில் வந்த இருவர் வருவாய்த்துறை அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி உட்பட சிலர் தங்கி இருந்தனர். இதனால் கரோனா தடுப்பு விதிமுறையை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களைத் தங்க வைத்திருந்ததாக விடுதிக்கு இன்று மாநகராட்சியினர் சீல் வைத்தனர். மேலும், விடுதி உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.