

குடிமராமத்துப் பணியின்போது கண்மாயில் உள்ள நீரை வீணாக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த கூடலூர் கண்மாய் விவசாய சங்கத்தைச் சேர்ந்த ராமநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
’’ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவிலுள்ள கூடலூர் கண்மாய் நீரைப் பயன்படுத்தி 850-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம். கூடலூர் கண்மாய் குடிமராமத்துப் பணிக்கு அரசு ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது கண்மாயில் 70 சதவீத தண்ணீர் உள்ளது.
ஆடிப்பட்டத்தில் மழை பெய்தால் ஒரு போக விவசாயம் செய்ய முடியும். ஆனால் சிலர் தண்ணீரை வீணாக வெளியேற்றி விட்டு குடிமராமத்துப் பணியை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். எனவே சம்பா பருவத்துக்குப் பிறகு குடிமராமத்துப் பணியைத் தொடங்கவும், நடப்பாண்டில் விவசாயம் பாதிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார்.
பின்னர் கூடலூர் கண்மாயில் உள்ள நீரை வீண் செய்யாமல், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் மேற்பார்வையில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.