

மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை (21-ம் தேதி) இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று வரை 550 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 345 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். கரோனா தொற்று தமிழகத்தில் கண்டறியப்பட்ட ஆரம்பத்தில் மதுரையில் சென்னையைப் போல் கரோனா தொற்று வேகமாக இருந்தது. முதல் கரோனா உயிர் பலியும் மதுரையில்தான் நடந்தது. எனினும் கரோனா ஊரடங்கிற்குப் பிறகு தொற்றின் வேகம் குறைந்தது.
தற்போது வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியுள்ளது, இந்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கரோனாவைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனாவை முற்றிலும் ஒழிக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் கடைகள் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது’’ என்றார்.