வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு காவல் நிலையங்கள் மூடல்; பொதுமக்களிடம் புகார் மனுக்கள் வாங்க சிறப்பு ஏற்பாடு

காவல் நிலைய வளாகத்தில் புகார் மனுக்களைப் பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலைய வளாகத்தில் புகார் மனுக்களைப் பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

காவலர்களுக்கு கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்களுக்கு மூடிவைக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் வடக்கு மற்றும் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீஸார் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 23 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், 2 மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்துக் காவல் பிரிவு, 2 கலால் பிரிவுகளில் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்கள் மூடி வைக்கவும் எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலையத்துக்கு புகார் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களளின் வசதிக்காக காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் புகார் மனுக்களைப் பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தினுள் கிருமிநாசினி தெளித்து இன்றும் (ஜூன் 19) நாளையும் (ஜூன் 20) யாரும் உள்ளே செல்லாமல் இருக்க மூடிவைத்துள்ளனர்.

இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, "காவலர்களுக்கு கரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் எளிதாக காவலர்களுக்குக் கரோனா தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது. இரண்டு நாட்கள் காவல் நிலையங்களைப் பூட்டி வைத்தாலும் வழக்கம்போல் காவல் நிலையத்துக்கு வந்து புகார் மனுக்களை அளிக்கலாம். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்தின் வளாகத்திலும் ஒரு காவலரைப் பணியில் அமர்த்தி மனுக்களைப் பெட்டியில் செலுத்தவும் விசாரணை நடத்தவும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இனி வரும் நாட்களில் தினமும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in