மக்களைக் காப்போம்: அரசு ஊழியர் சங்கத்தினர் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு

மக்களைக் காப்போம்: அரசு ஊழியர் சங்கத்தினர் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு
Updated on
1 min read

‘கரோனாவிடமிருந்து மக்களைப் பாதுகாப்போம்; அத்துடன் நம்மையும் பாதுகாத்துக்கொள்வோம்’ என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நாகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இன்று காலை நாகப்பட்டினம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜீவானந்தம் உறுதிமொழியை வாசிக்க மற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பிறகு பேசிய அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு உறுப்பினர் அ.தி.அன்பழகன், "உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் முன்களப் பணியாளர்களின் தியாகத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலை வணங்குகிறது. தற்போது வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாகை மாவட்டத்தில் நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனால் முன்னைவிட கூடுதல் எச்சரிக்கையுடன் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது, நமது ஊழியர்கள் மத்தியில் நோய்த்தொற்று பரவத் தொடங்கும் அறிகுறிகள் ஆங்காங்கே தெரிகின்றன. நமது மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சேவையால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

இதே நிலை நீடிக்கவும், நம்மை நம்பியுள்ள, நம்மோடு தொடர்பில் உள்ள குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பாதுகாக்கவும், குறிப்பாக, நம்மைப் பாதுகாக்கவும் நாம் இந்த நேரத்தில் உறுதியேற்க வேண்டும்" என்றார்.

நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர் வி.விஸ்வநாதன் தனது நிறைவுரையில், “நமது மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரும் நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்கக் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.‌ அவ்வப்போது கைகழுவுதல் உள்ளிட்டவற்றால் நோய்த்தொற்று தொடர் சங்கிலியை அறுக்க வேண்டும். கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நம்மை நாடிவரும் மக்களைப் பாதுகாப்பதோடு நம்மையும் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in