

தஞ்சாவூரில் தொலைக்காட்சி சின்னத்திரை தொடர் படப்பிடிப்பில் பணியாற்றிய கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஜூன் 19-ம் தேதி வரை 228 பேர். இவர்களில் 143 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று (ஜூன் 20) 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரின் குழுவில் ஓட்டுநராக பணியாற்றிய பொட்டுவாச்சாவடி பகுதியைச் சேர்ந்த 48 வயது நபருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொலைக்காட்சி தொடரின் இயக்குநர், நடிகர்கள், நடிகைகள், அனைத்து பணியாளார்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலையம் மூடல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அணைக்கரை சோதனைச்சாவடியில், பந்தநல்லுார் காவல் நிலையத்தில் பணியாற்றும் 23 வயதுடையை காவலர் கடந்த 15 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பணியில் இருந்த போது மயக்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவரின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று (ஜூன் 19) மாலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, பந்தநல்லுார் காவல் நிலையம் தற்காலியமாக மூடப்பட்டு, அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று முதல் செயல்பட்டு வருகிறது.