Published : 20 Jun 2020 09:38 AM
Last Updated : 20 Jun 2020 09:38 AM

மறுபரிசீலனை செய்ய ஆய்வுக்குழு: பாடத்திட்டத்தை குறைத்து அமைக்க நல்ல வாய்ப்பு; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் வேளையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது தள்ளிபோகும் என்ற சூழல் எழுந்துள்ளது. அதனால் ஓராண்டில் மாணவர்கள் கல்வி பயிலும் நாட்கள் குறையுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. கல்வி பயிலும் காலம் குறைந்தால் தற்போதுள்ள முழுமையான பாடத்திட்டத்தை கற்பித்து முடிப்பது கடினமாகும். மாணவர்கள் படிப்பு சுமையும் அதிகமாகும்.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள் இன்றைய பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து அதனை குறைக்க இயலுமா என ஆய்வு செய்வதற்கு ஒரு கல்வி ஆய்வு குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டில் கல்விப் பயில உள்ள நாட்கள், பாடத்திட்டத்தின் அளவு,மாணவர்கள் கற்கும் திறன் அளவு, ஆசிரியர்கள் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இக்குழு பாடத்திட்டத்தை குறைத்து அமைக்க நல்ல வாய்ப்பு எழுந்துள்ளது. இந்த முயற்சியில் கல்வியின் தரம் குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நலன், கல்வியின் தரம் ஆகிய அனைத்தையும் கவனத்தில்கொண்டு செயல்பட உள்ள இக்கல்வி குழு நியமனத்தை முழு மனத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x