

சோளிங்கரில் கரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் காலாவதியான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. 350-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சோளிங்கர் பேரூராட்சி 4-வது வார்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு செவிலியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 5 வீடுகளை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வீடு வீடாக நேற்று முன்தினம் வழங்கியுள்ளனர்.
இந்த மாத்திரைகள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதத்துடன் காலாவதியானவை. இதுகுறித்த தகவல் பரவியதும் நேற்று விரைந்து சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த மாத்திரைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு புதிய மாத்திரைகளை வழங்கினர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.