மின் விசிறியில் சிக்கி தலைமுடியை இழந்த பெண்: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் முடி வளர்ந்தது - ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

மின் விசிறியில் சிக்கி தலைமுடியை இழந்த பெண்: பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் முடி வளர்ந்தது - ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
Updated on
1 min read

மின் விசிறியில் சிக்கி தலை முடியை இழந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் முடியை வளர வைத்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவரது மனைவி நாகம்மாள் (35). அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக நாகம்மாள் வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நாகம்மாள் தொழிற்சாலையில் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ராட்சத மின் விசிறியில், தலைமுடி சிக்கி சதையுடன் பிய்ந்து வந்துவிட்டது. தலையில் முடி இல்லாமல் பலத்த ரத்தக் காயத்துடன் மயங்கிக் கிடந்த நாகம்மாளை மீட்ட சக ஊழியர்கள் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்துவிட்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையின் (பிளாஸ்டிக் சர்ஜரி) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இதையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் டாக்டர் ஜி.எஸ்.ராதாகிருஷ்ணன், மயக்க டாக்டர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர் நாகம்மாளுக்கு சுமார் 6 மணி நேரம் நுண் ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நாகம்மாளுக்கு மீண்டும் தலையில் முடி வளர தேவையான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொடர் சிகிச்சையில் இருந்த நாகம்மாளுக்கு 2 மாதத்தில் பழையபடி தலையில் நன்றாக முடி வளரத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், ஆர்எம்ஓ ரமேஷ், பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் வி.ரமாதேவி, சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜி.எஸ்.ராதாகிருஷ்ணன், மகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று அளித்த பேட்டி:

பெண்களுக்கு தலை முடி என்பது மிகவும் முக்கியம். விபத்தில் சிக்கி தலை முடி இல்லாமலும், தலையில் இருந்த தோல் சிதைந்த நிலையிலும் வந்த பெண்ணுக்கு நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் அவருக்கு மீண்டும் பழையபடி தலைமுடி வளரத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவமனை வரலாற்றில் இது ஓர் அபூர்வமான அறுவை சிகிச்சையாகும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in