

ரிசர்வ் வங்கியின் உத்தரவையும்மீறி, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு சில வங்கிகள்சேவைக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல்தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நேரடி பணப் பரிவர்த்தனையை தவிர்ப்பதற்காக, ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் அதிக அளவு பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வாடிக்கையாளர்கள் கூறும்போது, “ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், ஆர்டிஜிஎஸ் ஆகிய சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ரூ.29 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி இந்த சேவைக் கட்டணங்களை ரத்து செய்தது. தற்போது மீண்டும் சில பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் சேவைக் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கி உள்ளன. ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றத்துக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு ஆர்பிஐ-யின் உத்தரவை மீறி சில வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திஉரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.