

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறை சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்த தமிழக உளவுத் துறை டிஐஜி கண்ணன் உட்பட 5 பேருக்கு வீர தீர செயல்களுக்கான முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டு பெங்களூருவில் தலைமறைவாக இருந்தபயங்கரவாத (அடிப்படைவாத)இயக்கத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் (இவர் அம்பத்தூரில் இந்துமுன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கு உட்பட பலவழக்கில் சிக்கியவர்) மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
வில்சன் கொலை வழக்கு
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் வில்சனை கடந்த ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தப்பி ஓடிய வழக்கில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இந்த சிறப்பான பணி உள்ளிட்ட வீர தீர செயலுக்கான ‘முதல்வர் விருது’ மாநில உளவுத் துறை (உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு) டிஐஜி டாக்டர் என்.கண்ணன், கியூ பிரிவு எஸ்பி ஜே.மகேஷ், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. எஸ்.அரவிந்த், கோவை சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி பி.பண்டரிநாதன், சென்னை சிறப்பு டிவிஷன் ஐஜி எம்.தாமோதரன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.