Published : 19 Jun 2020 09:38 PM
Last Updated : 19 Jun 2020 09:38 PM

இந்தியாவின் அனைத்து போரிலும் பிரதமர்கள் பக்கம் துணை நின்றது திமுக: ஸ்டாலின் பெருமிதம்

1962 சீன யுத்தத்தின் முதல் களப்பலி தூத்துக்குடி செல்வராஜ் என்கிற ராணுவ வீரர், தற்போது பழனி தாய்நாட்டின் எல்லைக்காக்க தமிழர்கள் முன் நிற்பார்கள் என்று ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசினார்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சினையில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும் என பிரதமர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

இன்று (19-06-2020) மாலை, திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய – சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு:

இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வணக்கம்.

முதலில், எல்லையில் இறுதிவரை போராடி- தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள - அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும், வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் குறிப்பிட்டுள்ளது போல், “உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது”. அந்தத் தியாகங்கள் இந்த நாட்டை மேலும் மேலும் ஒருமைப்படுத்தி- நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும்.

இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கோவிட்-19 பேரிடருடனான போராட்டம்; இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி. திமுகவைப் பொருத்தவரை, இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம்.

இங்கே பல்வேறு அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்தியலுடன் இருக்கலாம். நாட்டுப் பற்று என வந்தால் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம்.

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்; அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. திமுக தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்றார். எனவே, நமது வீடான இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க; நாட்டிற்கே முன்னுரிமை.

தன்னுடைய நிலத்திற்கும் மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. திமுகவைப் பொருத்தவரை, 1962 இந்தியா – சீனப் போராக இருந்தாலும், 1971 இந்தியா - பாகிஸ்தான் போராக இருந்தாலும், 1999-ல் கார்கில் போராக இருந்தாலும், நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம்.

ஜவகர்லால் நேருவாக இருந்தாலும்; இந்திரா காந்தியாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாயாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம்.

இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. 1962 இந்தியா - சீனப் போரின் போது, சீனாவை முதலில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக.

சில மணி நேரங்களிலேயே நிதி திரட்டி “பாதுகாப்பு நிதி” வழங்கியது திமுக. திமுகதோழர்கள் அனைவரும், எங்கள் கலைஞர் அன்று கூறியது போல், “Sons of the Soil”, அதாவது ‘இந்த மண்ணின் மைந்தர்கள்’, என்ற உரிமையும் உணர்வும் மிகக் கொண்டவர்கள்!

அனைத்துத் தருணங்களிலும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளித்த அண்ணா மற்றும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் வளர்ந்தது திமுக.

இன்று, அத்தகைய தலைவர்களின் வழிநின்று, நாட்டின் நலன் போற்றி; இந்தியா என்னும் எண்ணத்தைப் பாதுகாத்திட உழைத்திடும் இயக்கத்தை வழிநடத்துகிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

1962 போரின் போது முதல் களப்பலியானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன். இன்றைக்கு 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் - ராணுவ வீரர் பழனி அவர்களைத் தமிழகம் தியாகம் செய்திருக்கிறது.

நாட்டைப் பாதுகாக்கத் திமுகவும், தமிழக மக்களும் முதலில் வருவார்கள். “அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்தியா தனது சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்” என்ற பிரதமரின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

“இந்தியா அமைதியை விரும்புகிறது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது” என்றும் பிரதமர் கூறியிருப்பதைத் திமுக சார்பில் நான் வரவேற்கிறேன். எனவே, இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x