

டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலர்களைக் குறைத்து கரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணிகளுக்கு அதிக காவல்துறையினரை ஈடுபடுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்புக்குப் போடப்படும் காவலர் எண்ணிக்கை காரணமாக கரோனா நோய்த்தடுப்புக்கு காவலர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்புத் தலைவர் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தி பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் கோரிக்கை மனுவில், “ஒரு காவல் நிலையத்தில் இருக்கும் 10 காவலர்களில் 6 பேரை டாஸ்மாக் பாதுகாப்புப் பணிகளுக்கும், மீதமுள்ள 4 பேரை கரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணிகளுக்கும் தற்போது ஈடுபடுத்தி வருகின்றது,
போதுமான காவல்துறையினர் பணியில் இல்லாத காரணத்தால் பொது இடங்களில் மக்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
அதிக அளவில் கரோனா பாதுகாப்புப் பணிக்கு போலீஸாரைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழக உள்துறை, வருவாய்த் துறை, தமிழக டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.