ஆவின் பால் கேட்ட இலங்கை ராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

ஆவின் பால் கேட்ட இலங்கை ராணுவத்தின் கோரிக்கை நிராகரிப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
Updated on
1 min read

ஆவின் பால் கேட்ட இலங்கை ராணுவத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் இணைந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலை வகித்தார். பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் 3,419 உறுப்பினர்களைக் கொண்ட 255 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரம் சிறப்புக் கடனாக வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு கட்டுமான வாரியம் மூலம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் 432 தொழிலாளர்களுக்கு ரூ.8.64 லட்சம் மதிப்பிலும் வழங்கப்பட்டன. அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சிபெற்றுத் தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 14 பேருக்குத் தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதை் தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், ''ஸ்டாலின் நடவடிக்கையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரோடு போடாத சாலைப் பணியில் டெண்டர் முறைகேடு என்று கூறி திமுகவினர் வழக்குத் தொடர்வார்கள். திமுக கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஆவின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுகிறது. பாதுகாப்பான முறையில் மக்களுக்கு, இல்லந்தோறும் ஆவின் சென்றடைகிறது. தற்போது சென்னையில் 14 லட்சத்து 50 லிட்டர் ஆவின்பால் கொடுத்து வருகின்றோம். கொள்முதலும், விற்பனையும் கூடியுள்ள நிலையில் ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் தடையில்லாமல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று இலங்கை அரசு, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு ராணுவத்திற்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கேட்டது. ராணுவத்திற்குப் பால் தர மறுத்து அங்குள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு ஆவின் பால் தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in