சேலம் தெற்கு காவல் உதவி ஆணையருக்கு கரோனா; உடன் பணியாற்றிய 10 போலீஸார் தனிமைப்படுத்தல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சேலம் தெற்கு காவல் உதவி ஆணையர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றிய 10 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சேலம், தெற்கு சரக காவல் உதவி ஆணையருக்கு கடந்த ஒருவாரமாக தொண்டை கரகரப்பாக இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அவர் முகாம் அலுவலகத்தில் இருந்து வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். நேற்று (ஜூன் 18) அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு இன்று (ஜூன் 19) காலை வந்த நிலையில், காவல் உதவி ஆணையருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அவர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஒருவரைப் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து உதவி காவல் ஆணையர் உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்தனர். கைதானவருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், காவல் உதவி ஆணையர் உள்ளிட்ட போலீஸாருக்கு அப்போதே, கரோனா தொற்று பரிசோதனை செய்து, 'நெகட்டிவ்' என்று முடிவு வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதல் தொண்டை கரகரப்பால் பாதிப்படைந்த காவல் உதவி ஆணையருக்கு தற்போது, கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், உடன் பணியாற்றும் போலீஸார் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காவல் உதவி ஆணையருடன் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு வரும் நாட்களில் கரோனா தொற்றுப் பரிசோதனை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மது விற்ற இருவருக்குக் கரோனா தொற்று:

அன்னதானப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்துக் கடை மூலமாக கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரைக் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போலீஸார் 20-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவருக்கும் அரசு மருத்துவமனையில் செய்த பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்து விசாரித்த காவல் ஆய்வாளர் உள்பட 20 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in