குமரி கல்லூரி விடுதியில் கரோனா ஆய்வுக்குச் சென்ற பெண் சார் ஆட்சியர்; முற்றுகையிட்ட பொதுமக்கள்

குமரி கல்லூரி விடுதியில் கரோனா ஆய்வுக்குச் சென்ற பெண் சார் ஆட்சியர்; முற்றுகையிட்ட பொதுமக்கள்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி நடந்து வரும் நிலையில், வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளைக் கல்லூரி மற்றும் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

திருவட்டாறை அடுத்த ஆற்றூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தங்கும் விடுதி, மாத்தூரில் உள்ள கல்லூரி ஆகியவற்றை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆற்றூரில் உள்ள கல்லூரி தங்கும் விடுதியில் ஆய்வு செய்ய வந்தபோது விடுதி வாசலில் அப்பகுதிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் சார் ஆட்சியர் சரண்யா அறி மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது, கல்லூரி தங்கும் விடுதி அருகே வீடுகள் நெருக்கமாக இருப்பதால் கரோனா தனிமை முகாம் அமைத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், தங்கும் விடுதியில் உள்ள மாணவர்கள் போதை ஊசி, போதை மருந்து போன்றவற்றைப் பயன்படுத்துவதாகவும், விடுதி மொட்டை மாடியில் நின்றவாறு மது அருந்திவிட்டு குடியிருப்புப் பகுதிகளில் வீசுவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் அளித்தனர்.

முற்றுகையிட்ட பொதுமக்களிடம் மைக் மூலம் பேசிய சார் ஆட்சியர் சரண்யா அறி, கல்லூரி விடுதியை முறையாக ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆற்றூர் கல்லூரி தங்கும் விடுதி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in