

சமுதாயப் பொறுப்பு மிக்கவர்களே, தனிமனித இடைவெளியைக் காற்றில் பறக்க விடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 19) வெளியிட்டுள்ள அறிக்கை:
"சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் குழுவில் இருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. இச்சூழலில், இன்று (ஜூன் 19) கோவையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது சரிதானா?
மேலும், கடந்த ஒரு மாதமாகவே கோவை ரேஸ் கோர்ஸ், பேரூர், குறிச்சி குளம், ஆலாந்துறை, சூலூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், போதிய பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமலும், அமைச்சருடன், அரசு அதிகாரிகள், நூற்றுக்கணக்கான அதிமுகவினர் உள்ளிட்டோர் கூட்டமாகவும், நெருக்கமாக நின்று கொண்டும் பங்கேற்றனர்.
அரசு அறிவித்த தனிமனித இடைவெளியை சிறுதும் பொருட்படுத்தாமல் மேற்கண்ட நிகழ்சிகளில் பங்கேற்றது நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளது. அதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான கட்சியினர் சூழ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார்
இதனால், சமூகப் பரவலுக்கு ஆளுங்கட்சி நிகழ்ச்சிகளே காரணமாகிவிடுமோ என்று மக்களிடம் அச்சம் நிலவுகிறது.
கரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய, சமுதாயப் பொறுப்பு மிக்கவர்களே தனிமனித இடைவெளியைக் காற்றில் பறக்க விடுவதுபோல செயல்படுவது சரியா?
ஏற்கெனவே, கோவையில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே பாதிப்பும், அச்சமும் நிலவும் சூழலில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத பொறுப்பற்ற செயல்களால், நோய்த் தொற்று கடுமையாகப் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தனிமனித இடைவெளி இல்லாமல் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்த்து, கரோனாவைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு எம்எல்ஏ கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.