

நிறுவனங்களின் சமூகப் பொறுப்பில் விவசாய மேம்பாட்டையும் சேர்த்து, வேளாண் வளர்ச்சிக்காக நிறுவனங்கள் வழங்கும் நிதியை நிறுவன சமூகப் பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்.) கணக்கில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று 'சி.எஸ்.ஆர். ஸ்பார்க்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனரும், தலைமைப் புரவலருமான ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலர் ராஜேஷ் வர்மாவுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
"இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு மீண்டும் புனர் வாழ்வு அமைத்துக் கொடுக்கவும் 'பி.எம்.கேர்ஸ்' என்ற நிதி உருவாக்கப்பட்டு, அதற்கு நிறுவனங்கள் வழங்கும் நிதியை சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவன சமுதாயப் பொறுப்பு நிதி கணக்கில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில் 'சுயசார்புடைய இந்தியா' என்ற திட்டத்தையும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம், மக்களுக்கு உணவு வழங்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நல்ல திட்டங்களை உள்ளடக்கியது. கரோனா காலத்தையும் தாண்டி, விவசாயிகளுக்கான உதவிகள் தொடர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
விதை கொள்முதலில் தொடங்கி, விவசாயக் கட்டமைப்புகள், வயல்வெளி செயல்பாடுகள், உரம், பூச்சி மருந்து, பாசனம், அறுவடை, தானிய சேமிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் புதிய பயிர் வகை ஆராய்ச்சி என அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்கு அரசின் உதவி மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் உதவியும், வழிகாட்டலும் தேவை. இது சமூக விவசாயத்துக்கும் வழிவகுக்கும். எனவே, விவசாய உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவு அவசியமாகும்.
எனினும், விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக சி.எஸ்.ஆர். விதிகளில் (பிரிவு 135 உட்பிரிவு 7) எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இந்தப் பிரிவில் விவசாய மேம்பாட்டைச் சேர்க்க வேண்டும். இது வருங்காலத்தில் விவசாயம் தழைக்க, சி.எஸ்.ஆர். மூலம் நிறுவனங்கள் உதவ ஏதுவாக இருக்கும். விவசாய மேம்பாட்டுக்கு நிறுவனங்கள் வழங்கும் நிதியை சி.எஸ்.ஆர். கணக்கில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இந்த நடவடிக்கை நமது நாடு உணவு தற்சார்பு நிலையை வேகமாக அடைய வழிவகுக்கும் என்பது உறுதி".
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.