Last Updated : 19 Jun, 2020 05:03 PM

 

Published : 19 Jun 2020 05:03 PM
Last Updated : 19 Jun 2020 05:03 PM

தாய் மரணம்; சிறுமி கொலை வழக்கில் சிறையில் உள்ள தந்தை; ஆதரவின்றித் தவித்த மகள்களை மீட்டுக் காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸார்

ஆதரவின்றித் தவித்த 2 மாணவிகளை மீட்டு ஆதரவற்றோர் நலக் காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய் மரணித்ததோடு, சிறுமி கொலை வழக்கில் தந்தையும் சிறை சென்றதால் ஆதரவின்றித் தவித்த மகள்களை மீட்டு போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் கே.பன்னீர் (41). இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு வித்யா (13) உட்பட 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். பன்னீர், மூக்காயி என்பவரையும் திருமணம் செய்துகொண்டார். மூக்காயி, வடுதாவயலில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள்.

இந்நிலையில், துரிதமாக பணக்காரராக வரலாம் எனவும், குடும்பப் பிரச்சினைகள் தீரும் எனவும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண் மருளாளி வசந்தி கூறியதைக் கேட்டு கடந்த மாதம் வித்யாவைத் தந்தை பன்னீர் உள்ளிட்டோர் கொலை செய்தனர்.

இவ்வழக்கில், பன்னீர், வடுதாவயலைச் சேர்ந்த பி.குமார் (32), வசந்தி, மின்னாத்தூரைச் சேர்ந்த முருகாயி ஆகியோரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மூக்காயி சந்தேகமான முறையில் இறந்துவிட்டார்.

இந்நிலையில், பன்னீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும், மூக்காயி உயிரிழந்துவிட்டதாலும் இவர்களது 2 மகள்களும் மூக்காயியின் தாயார் அரவணைப்பில் இருந்தனர்.

வயது முதிர்வின் காரணமாக அவரால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார், இருவரையும் மீட்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, புதுக்கோட்டை குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார், மூக்காயியின் தாயாருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். மேலும், அவரிடம் இருந்த மூக்காயியின் 2 மகள்களையும் மீட்டு ஆதரவற்றோர் குழந்தைகள் நலக் காப்பகத்தில் இன்று (ஜூன் 19) சேர்த்தனர்.

ஆதரவின்றித் தவித்த இருவரையும் மீட்டு பாதுகாப்பான முறையில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x