Published : 19 Jun 2020 04:55 PM
Last Updated : 19 Jun 2020 04:55 PM

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 15 வயதுச் சிறுவன்: குடும்ப நிலை அறிந்து உதவிய ரசிகர் மன்றத்தினர்

ரஜினிகாந்த் வீட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பள்ளி மாணவர் எனவும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்துள்ளது. அவரது குடும்ப நிலை அறிந்து வீடு தேடிச் சென்ற ரஜினி ரசிகர் மன்றத்தினர் நிவாரண உதவிகள் அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது வெடிப்பதற்குள் போய் எடுத்துவிடுங்கள் என்றும் 108 ஆம்புலன்ஸ் எண்ணுக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு நேற்று வந்தது. உடனடியாக தேனாம்பேட்டை போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினி வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர்.

சோதனையில் அது புரளி எனத் தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபரை அவரது செல்போன் எண்ணை வைத்துத் தேடினர். விசாரணையில் தொலைபேசி அழைப்பு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திலிருந்து வந்துள்ளதாகத் தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது அவர் 15 வயதுச் சிறுவன் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

அவரது பெற்றோரை எச்சரித்த போலீஸார், இனி அவ்வாறு நிகழாது என எழுதி வாங்கிக்கொண்டு சிறுவனை பெற்றோருடன் அனுப்பினர்.

அப்போது சிறுவனின் தந்தை, தானும் ரஜினி ரசிகன்தான். தனது மகன் செய்த தவறுக்கு ரஜினிகாந்த் தன்னை மன்னிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனிடையே சிறுவன் குறித்த தகவலை அறிந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அவரது குடும்ப வறுமை அறிந்து நிவாரண உதவிகளை வழங்கி அக்குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சிறுவனுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் உதவுவதாக கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

''மறப்போம், மன்னிப்போம். மனநிலை பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அதையும் செய்வோம். #மக்கள்தலைவர் வழியில் நம் பயணம்''.

இவ்வாறு ரவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x