

கரோனா தொற்று முன்னணிப் படை வரிசையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா நோயை விரட்ட மக்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணம் கவிதை ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. அரசின் முன் களப்பணியாளர்களில் முதல் பணியாளர் அமைச்சர் விஜயபாஸ்கர். கரோனா தொற்று நடவடிக்கையில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் சுகாதாரத்துறை சிறப்பான ஒன்று எனப் பெயர் எடுத்தது.
தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கையில் தொற்றுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தான் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 55 சதவீதம் உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனாவை விரட்ட அனைவரும் கைகோப்போம் எனக் கவிதை எழுதியுள்ளார்.
அவரது ட்விட்டர் கவிதை:
அஞ்சாத அயல்நாடுகளும்
திண்டாடி நடுங்கும்
கொடூரக் கொரோனா
திண்டாடி ஓடும்...
விலகியிருந்து விழிப்புடன் இருந்து
வென்றிடுவோம் பெருந்தொற்று
அரக்கனை!
அஞ்சாதீர்கள்... நெஞ்சுரம் கொள்ளுங்கள்...
முகக்கவசம் தரித்து
கைகளைச் சுத்தப்படுத்தி
அநாவசியம் தவிர்த்து
வீட்டிலிருங்கள்...
அடங்கும் தொற்று!
நமது அரசு முன்னின்று மக்களைக் காக்கும்...
நாங்கள் இருக்கிறோம்
போர்க்களத்தில்...
மருத்துவப் பணியாளர்களாக
காவல்துறை வீரர்களாக
உங்களுக்காகப்
போராடுகிறோம்!
ஒத்துழைப்பு மட்டும் தந்து
நம்பிக்கையோடு
காத்திருங்கள்!
கொரோனாவை வீழ்த்துவோம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் கவிதைக்குப் பாராட்டுகளை நெட்டிசன்கள் தெரிவித்தாலும் சிலர் விமர்சனமும் வைத்துள்ளனர்.
“அரசு மக்களிடத்தில் ஒத்துழைப்பு மட்டுமே எதிர்பார்க்கிறது. மக்களுக்கு நிவாரணத் தொகை, நிவாரண உதவி அரசு மாதாமாதம் வழங்கினால் மக்களும் ஒத்துழைப்பார்கள்” என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.