

சாலை விரிவாக்க டெண்டர் முறைகேடு என முதல்வருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததை வாபஸ் பெற்ற ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக பைபர் ஆப்டிக் கேபிள் டெண்டர் நடைமுறையை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கையும் வாபஸ் பெற்றார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அவரது மனுவில், ''மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்துக் கிராமங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆயிரத்து 950 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் கலந்துகொண்ட பெரும்பாலான நிறுவனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்.
கரோனா அச்சம் பரவத் தொடங்கிய டிசம்பர் மாதத்தில் அதில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட இரு நிறுவனங்களைத் தேர்வு செய்யும் நோக்குடன், விதிகளைத் திருத்தம் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது.
முதல்வர் பழனிசாமி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோரின் விருப்பத்திற்கு இணங்க டெண்டர் ஒதுக்கும்படி தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு மற்றும் டான்ஃபினெட் நிர்வாக இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் ஆகியோருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''டெண்டர் தேதி இன்னும் முடிவடையவில்லை. அது இ- டெண்டர் என்பதால் தகுதியுடைவர்கள் எவரும் தற்போது கூட பங்கேற்கலாம். டெண்டர் இன்னும் மூடப்படவில்லை.
ஆர்.எஸ்.பாரதியின் புகார் குறித்து விசாரித்ததில் முகாந்திரம் இல்லை. ஜூன் 2-ம் தேதி புகார் முடித்து வைத்து அதுகுறித்த அறிக்கை மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், டெண்டர் நடைமுறைகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் சிலருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக எப்படிக் கூற முடியும் எனவும் அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் முடிக்கப்பட்டது குறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்ததின் அடிப்படையில் வழக்கை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ். பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.