Published : 18 Jun 2020 06:41 PM
Last Updated : 18 Jun 2020 06:41 PM

சென்னையில் வீடுகள்தோறும் பரிசோதனை மேற்கொள்ள 10,000 வெப்பமானி; 1,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர்: மாநகராட்சி ஆணையர் தகவல்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவும், மருத்துவ முகாம்களில் பயன்படுத்துவதற்காகவும், காய்ச்சலைக் கண்டறிவதற்காகவும் 10 ஆயிரம் வெப்பமானி மற்றும் 1,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 18) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிக்காக கடந்த 15-ம் தேதி முதல் காய்ச்சல் முகாம் சென்னையில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 200 கோட்டங்களிலும், ஒரு கோட்டத்திற்கு இரண்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் என 680 மருத்துவ முகாம்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவும், மருத்துவ முகாம்களில் பயன்படுத்துவதற்காகவும், 1 முதல் 15 மண்டலங்களுக்கு காய்ச்சலைக் கண்டறியும் 10 ஆயிரம் வெப்பமானி கோட்ட நல மருத்துவ அலுவலர், வீடுகள்தோறும் சென்று கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள், கண்காணிப்பு மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகளைத் தொடாமல் அதி விரைவில் நோயாளிகளின் வெப்பநிலையைக் கண்டறிந்து, வெப்பநிலை அதிகம் உள்ளவர்களுக்கு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வீடுகள்தோறும் சென்று கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pulse Oxymeter) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, 1,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் மீதமுள்ள அனைத்து மண்டலங்களுக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவ முகாம்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் உடனடியாக நோயின் தாக்கம் கண்டறியப்படுகிறது. இந்த உபகரணங்கள் மூலம் கரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மேல் சிகிச்சை தேவைப்படின் பரிந்துரைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x