

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராத 9 மருத்துவர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப ஆட்சியர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற ஆட்சியர் அங்கு மருத்துவர் இல்லாதது குறித்து கேட்டறிந்தார் பின்னர் புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பிரிவுகளையும் பார்வையிட்டார். அப்பகுதிகளில் சமூக இடைவெளியின்றி புறநோயாளிகள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்யக் கூறினார்.
வைரஸ் தொற்று கண்டறியும் நவீன ஆய்வகத்துக்குச் சென்ற ஆட்சியர், அங்கு போதிய முகவுரை, கையுறைகள் மற்றும் தலைக்கவசம் இருக்கிறதா எனக் கேட்டறிந்தார். ஆட்சியருக்கு வழங்கப்பட்ட கையுறைகள் அணியும்போது கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வின் இறுதியாக மருத்துவர்கள், செவிலியர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டார். அப்போது 9 மருத்துவர்கள் பணிக்கு உரிய நேரத்தில் வராதது தெரிய வந்தது. அந்த மருத்துவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆய்வு குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்கெனவே இருந்த 150 படுக்கை வசதியானது, தற்போது 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினாலும், உரிய நேரத்துக்கு பணிக்கு வராத காரணத்தால் 9 மருத்துவர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆய்வின்போது, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மலையரசு உடனிருந்தார்.