Published : 18 Jun 2020 06:10 PM
Last Updated : 18 Jun 2020 06:10 PM

மளிகை, காய்கறிகள் வாங்க 2 கி.மீ.க்குள் நடந்தே போகவும்; தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் பேட்டி 

முழு ஊரடங்கில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மளிகை, காய்கறிப் பொருட்கள் வாங்க வீட்டுக்கு அருகில் உள்ள பகுதிக்கு நடந்தே செல்ல வேண்டும். கார், இருசக்கர வாகனத்தில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30-ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. சென்னையில் ஊரடங்கு அமல் குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்தார்.

பேட்டி அளிப்பதற்கு முன்னர் ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு காவல் ஆணையர், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி எடுத்து வரும் அரசின் நடவடிக்கைக்கு, முடிவுக்கு, உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இந்த 12 நாட்களில் பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் 2 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் மளிகைக் கடை, காய்கறிக் கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கவேண்டும். இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் தொலை தூரங்களுக்குச் செல்ல வேண்டாம். அவ்வாறு சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மருத்துவச் சேவை, அவசிய காரியம் தவிர ரயில் நிலையம், விமான நிலையம் செல்வதற்கு மட்டும் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. அதைத் தவிர அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மத்திய, மாநில அரசு மற்ற தனியார் அலுவலகங்களுக்கு 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு வருபவர்கள் தங்கள் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து பெரிய அளவில் வைத்திருந்தால் போலீஸார் சோதனை செய்து அனுப்ப எளிதாக இருக்கும்.

சென்னைக்கு வெளியே பணிபுரியும் பணியாளர்கள் தினசரி சென்றுவர அனுமதி இல்லை. அத்தியாவசியத் தேவை இல்லாமல் வெளியில் சுற்றுபவர்களைக் கண்காணிக்க சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 228 சோதனைச் சாவடிகள் சென்னைக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. தேவையின்றி சுற்றுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

பெருநகர எல்லைக்கு வெளியே செல்பவர்கள் அனுமதியின்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். போலி இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவை இல்லாமல் சுற்றுபவர்கள், முகக்கவசம் அணியாமல், தேவையான பாதுகாப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்காதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அண்ணா சாலை, காமராஜர் சாலை மூடப்படும்.

வாகனம் ஓட்டுவோர், வெளியில் வருவோர் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். வெளியில் வருபவர்கள் திருமணம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக அனுமதி பெற்றவர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. முன்னர் வாங்கியிருந்தால் இம்முறை புதுப்பித்து வாங்க வேண்டும்.

காய்கறி, மளிகைக் கடைக்காரர்கள் நேரக் கட்டுப்பாட்டைப் கடைப்பிடிக்க வேண்டும், கடைகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். கடைக்குள் ஏசி போடக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் தொற்று பரவும் சூழ்நிலை உள்ள கடைகள், மார்க்கெட் மூடப்படும்.

இது அசாதாரணமான சூழ்நிலை. நோய் அதிக அளவில் பரவுவதால் அரசாங்கம், முதல்வர் வேண்டுகோளைப் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சட்டப்படி மட்டுமே நடப்போம். தண்டனை கொடுப்பது குறித்துப் பேச வேண்டாம்.

இம்முறை போலீஸார் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வார்கள். 788 போலீஸார் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 பேர் மருத்துமனை சிகிச்சையில் உள்ளனர். 216 பேர் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். 20 ஆயிரம் போலீஸார் பணியில் உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர, 10 சதவீதம் பேரை ஓய்வில் வைத்துள்ளோம்.

இவர்கள் தவிர 17 ஆயிரம் போலீஸார், சிறப்பு போலீஸார் 1000 பேர் என 18 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேவைப்பட்டால் இன்னும் அதிகமான போலீஸாரைப் பயன்படுத்தும் அளவுக்கு போலீஸார் தயார் நிலையில் இருக்கிறார்கள்''.

இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x