

குமரி மாவட்டத்திற்குள் காரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் குறுக்கு வழிகளில் நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி மதியம் சுமார் இரண்டு மணிக்கு அரசு பேருந்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு காரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை செய்ததில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்து பின்னர் அரசு பேருந்து மூலமாக நாகர்கோவில் வந்தது தெரியவந்தது.
இதனால் அவருடன் பேருந்தில் பயணம் செய்த 40 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வீட்டு தனிமைபடுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே பேருந்தில் பயணம் செய்யும்போது மக்கள் அலட்சியமாக இல்லாமல் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு முககவசம் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களில் ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டு சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நடைமுறைகளை தவிர்க்கும் வகையில் ஒரு சில குறுக்கு வழிகளில் மாவட்டத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு குறுக்கு வழிகளில் நுழைபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வெளிமாவட்டங்க இருந்து யாரேனும் வருகை தந்துள்ளதாக தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.