

தமிழ்நாட்டில் ஓடும் 30 பயணிகள் ரயிலை கரோனா காலத்திலேயே எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏழைகளும், சிற்றூர்வாசிகளும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஓடும் 508 பயணிகள் (பாசஞ்சர்) ரயில்களை விரைவு வண்டிகளாக (எக்ஸ்பிரஸ்) மாற்ற இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதில் 30 பயணிகள் ரயில்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. மதுரை - கொல்லம், விழுப்புரம் - திருநெல்வேலி, விழுப்புரம் - புதுவை, கோவை - கண்ணனூர் ரயில்கள் அவற்றில் முக்கியமானவை.
இதுகுறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர் முகம்மது ரஃபீக், துணைச் செயலாளர் ராம்குமார் ஆகியோர் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், "ரயில்வேயைத் தனியார் மயமாக்குவது, பயணிகள் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவது போன்ற நோக்கங்களோடு இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த உத்தரவும்.
நாடு முழுவதும் 200 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் இப்படி விரைவு வண்டிகளாக மாறுகின்றன. நாளைக்குள் (19-ம் தேதி) இந்த மாற்றத்தைச் செய்யுமாறு நேற்று மாலையில் இந்திய ரயில்வே அவசர உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் ரயில் நிறுத்தங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், ரயில் கட்டணமும் இரு மடங்காக உயரும். இது ஏழைகள், மற்றும் சிற்றூர்வாசிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
தென் மாவட்டங்களில் இன்னும் ரயில் நிலையங்களையே பார்க்காத பல பெரிய நகரங்கள் இருக்கின்றன. அந்த ஊர்களை எல்லாம் இணைத்து புதிய ரயில்பாதை போட வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 100 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. இந்த நேரத்தில் ஏற்கெனவே ரயில் ஓடிக்கொண்டிருக்கும் ஊர்களும் ரயில்வேயின் இப்போதைய உத்தரவால் ரயில் நிற்காத ஊர்களாக மாறிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்களைப் பாதிக்கிற இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றனர்.
இதேபோல மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும் ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஏற்கெனவே ‘கோவிட் 19’ஐப் பயன்படுத்தி தொழிலாளர் நலச்சட்டங்களைப் பறிப்பது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது ஏழைகள் அதிகம் பயன்படுத்துகிற பயணிகள் ரயிலையும் ஒழித்துக்கட்டுகிற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
இந்த ஒவ்வொரு பயணிகள் ரயிலும் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொன்றாகப் பெறப்பட்டவை. அனைத்தையும் ஒரே நேரத்தில் இப்படி மாற்றுவதால் ஏழைகள், வணிகர்கள், சிற்றூர்வாசிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மக்களுக்கு எதிரான இந்த உத்தரவை ரயில்வே உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருக்கிறார்.