மலைவாழ் மக்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி: வழக்குப்பதிவு செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

காவல்துறையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
காவல்துறையைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வாழப்பூண்டி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்குச் சொந்தமான 70 ஏக்கர் விளைநிலங்களை, சேலத்தைச் சேர்ந்த வினோத் கந்தையா என்பவர் அபகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மலைவாழ் மக்கள் நிலங்கள் அம்மக்களுக்கே சொந்தமானது என்ற வாதத்தை முன்வைத்து, சங்கராபுரம் நீதிமன்றத்தை நாடினர்.

நீதிமன்றமும் மலைவாழ் மக்களுக்கே நிலம் சொந்தமானது எனத் தீர்ப்பளித்த நிலையில், வினோத் கந்தையா, மேல்முறையீட்டுக்காக, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தை நாடிய நிலையில், நிலம் மலைவாழ் மக்களுக்கே சொந்தம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 16) வினோத் கந்தையா, மலைவாழ் மக்களின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா உள்ளிட்ட பழங்களைப் பறித்துள்ளார். இதையறிந்த மலைவாழ் மக்கள் அந்த நபரையும், பழங்களைப் பறித்து ஏற்றிச்செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து கரியாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 18) அவர் மீது புகார் கொடுக்க மலைவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்றபோது, வாகனமும் அந்த நபரும் காவல் நிலையத்தில் இல்லாதாதால், கரியாலூர் காவல்துறையினரைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வினோத் கந்தையா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வலியுறுத்தினர்.

இதையடுத்து, மலைவாழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் காய், கனிகளை வாகனத்துடன் திருடிச் சென்றதாக போலீஸார் வினோத் கந்தையா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, மலைவாழ் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in