

சென்னையில் இருந்து விமானத்தில் திருப்பூர் திரும்பிய 24 வயதுப் பெண் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது குடும்பம் உள்ள பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் இன்று (ஜூன் 18) கூறியதாவது:
"சென்னையில் இருந்து நேற்று (ஜூன் 17) திருப்பூர் கொங்குநகர் குழிக்காட்டை சேர்ந்த 24 வயதுப் பெண் ஒருவர் விமானத்தில் கோவை வழியாக திருப்பூர் திரும்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு 'ஸ்வாப்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டார். அவர் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பரிசோதனையை ஆய்வு செய்தபோது, அவருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்ததாக, குடும்பத்தினர் 5 பேர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த 18 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் வசித்து வந்த பகுதி, கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்".
இவ்வாறு திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.