தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா சமூகப்பரவல் இல்லை: ஆட்சியர் பேட்டி

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா சமூகப் பரவல் இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். சோதனைச் சாவடியை வாகனங்களில் கடந்து செல்லும் மக்களிடம் உள்ள இ-பாஸை வாங்கி சோதனையிட்டார்.

தொடர்ந்து வாகனங்களில் வருவோர் மற்றும் நடந்து வருபவர்களிடம் சோதனையை தீவிரப்படுத்துவது குறித்து அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 19,873 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், 487 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 329 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அந்தந்த வட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு மட்டும் 1600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமானாலும் உரிய தேவைகளுடன் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.

கடந்த ஒரு வாரமாக வெளி மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதியுடனும், அனுமதியின்றியும் ஏராளமானோர் வருகின்றனர். இதில், சிலர் போலி இ-பாஸ் மூலமாக வருவதாகவும் புகார்கள் வந்தன. தூத்துக்குடி மாவட்ட எல்லைகளான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி, எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை, வேம்பார் அருகே காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில், ஏராளமானோர் பாஸ் இல்லாமல், நடந்து வருவதாக தெரியவந்தது. இதையடுத்து முக்கியமான 7 சிறிய சாலைகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்துக்குள் இரவு நேரங்களில் நடந்து வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், கோவில்பட்டி சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீஸ் பணியமர்த்தப்பட்டு, வாகனங்களை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலி இ-பாஸ் மூலமாக வருபவர்கள் உடனடியாக கண்டறிய சோதனைச்சாவடிகளில் பணியில் உள்ள அலுவலர்களின் செல்போனில் க்யூ.ஆர். ஸ்கேனர் செயலி தரவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் மருத்துவ அவசர தேவை என இ-பாஸ் பெற்று கோவில்பட்டியில் இருந்து சிலரை சென்னைக்கும், அங்கிருந்து சிலரை கோவில்பட்டிக்கும் அழைத்து வருவது என வாடகை கார் வேலை போன்று செய்துள்ளார்.

இதைக் கண்டறிந்து அவரை கைது செய்து விட்டோம். துக்க வீட்டுக்கு செல்ல என கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற்று 9 பேர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ-பாஸை தவறாக பயன்படுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை சமூக பரவல் இல்லை.

மக்கள் அதிக செல்லும் ஊர்களுக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in