

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரினச விழாவில் கலந்துகொள்ள பக்தர்கள், முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 50 தீட்சிதர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா ஆகியவை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாக்களுக்கு உலக நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.
இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன விழா திருவிழா நாளை (ஜூன் 19) கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று கோயில் பொது தீட்சிதர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகத்தில் பக்தர்கள் இருந்தனர்.
இதற்கிடையே ஆனித் திருமஞ்சன விழாவுக்கான ஏற்பாடுகளை தீட்சிதர்கள் செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விழாவை நடத்துவது குறித்து கடந்த 16-ம் தேதி சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தீட்சிதர்கள் சுவாமியை உள்பிரகாரத்தில் சுற்றி வர அனுமதி தர வேண்டும் எனக் கூறினர். ஆனால், அதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்வில்லை. இதனால் அந்தக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு
இந்த நிலையில் நேற்று (17-ம் தேதி) கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆனித் திருமஞ்சன விழாவை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசுகையில், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் எளிய முறையில் ஆனித் திருமஞ்சன விழாவை நடத்திக் கொள்ளலாம். விழாவில் கலந்துகொள்ள பக்தர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. 50 தீட்சிதர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். கோயிலுக்குள்ளே பூஜைகளை நடத்திக்கொள்ள வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதாலும், கரோனா வைரஸ் பரவும் சூழல் உள்ளதாலும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை நடத்தக் கூடாது. மேலும், விழாவுக்கு ஊரடங்கில் இருந்து எந்தவிதத் தளர்வுகளும் அளிக்கப்படாது" என்றார்.
இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் பொது தீட்சிதர்கள் கலந்துகொண்டனர்.
நாளை (ஜூன் 19) நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் ஆனித் திருமஞ்சன விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாள் விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று (ஜூன் 18) காலையில் நடராஜர் கோயிலில் பிரதான வாயிலான கீழ சன்னதியில் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.