Published : 06 Sep 2015 11:34 AM
Last Updated : 06 Sep 2015 11:34 AM

ஒரே பதவி... ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், அதிலுள்ள குறைகளைக் களைய வேண்டுமென மத்திய அரசி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

முன்னாள் இராணுவத்தினருக்கான ஒரே பதவி.... ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் முக்கிய அம்சங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில், பல ஆண்டுகளாக போராடி வரும் முன்னாள் இராணுவத்தினரின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அத்திட்டம் அமையாதது வருத்தமளிக்கிறது.

ஓய்வூதியத்திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற படைவீரர்கள் கோரி வரும் நிலையில், ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படை தேதி கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியாக இருக்க வேண்டும் என்பது இராணுவத்தினர் கோரிக்கை.

ஆனால்,கடந்த ஆண்டின் தொடக்கத்தை அடிப்படையாக வைத்து ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஓய்வூதியம் ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இவை தான் முன்னாள் இராணுவத்தினர் சுட்டிக்காட்டும் குறைகளில் மிகவும் முக்கியமானவையாகும்.

முன்னாள் இரானுவத்தினருக்கு 1973 ஆம் ஆண்டு வரை ஒரே பதவி... ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக இராணுவத்தினர் போராடி வருகின்றனர். மக்களவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மோடி தலைமையிலான அரசு அமைந்த 100 நாட்களில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்து 465 நாட்கள் கழித்து, அதுவும் முன்னாள் இராணுவத்தினர் 84 நாட்களாக தில்லியில் தொடர்போராட்டம் நடத்திய பிறகு தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய திட்டம் எண்ணற்ற குறைபாடுகளுடன் அமைந்திருப்பது யாருடைய நோக்கத்தையும் நிறைவேற்றாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணம் போராட்டம் நடத்தும் முன்னாள் இராணுவத்தினரை அழைத்து பேசாதது தான். அவர்களை அழைத்து பேசியிருந்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்ற எண்ணத்தில் முன்னாள் இராணுவத்தினர் சிலர் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து பேசியபோது, இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவித்து அப்பிரச்சினைக்கு முடிவு கட்டியிருக்கிறார். அதேபோல் மத்திய அரசு நினைத்தால் மற்ற பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண முடியும்.

ஒரே பதவி.... ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ. 10,000 கோடி வரை கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத்தினரின் பிற கோரிக்கைகளை நிறைவேற்ற இதில் 10% கூட கூடுதலாக செலவாகாது. எனவே, முன்னாள் இராணுவத்தின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, ஒரே பதவி.... ஒரே ஓய்வூதியம் திட்டத்திலுள்ள குறைகளை களைய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x