

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், இவர்களின் தாயார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று (ஜூன் 17) வரை 478 ஆக உள்ளது. 101 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 371 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறும்போது, "இன்று (ஜூன் 18) மாவட்டத்தில் 32 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 510 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் இரட்டை இலக்கங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொற்றுடையோரில் 45 சதவீதம் சென்னையிலிருந்து வந்தவர்கள், மற்றவர்கள் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் 35 வயது இளைஞர் ஒருவர் கரோனா தொற்றால் விழுப்புரத்தில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவரின் சகோதரர் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் உயிரிழந்தார். தற்போது இவரின் தாயார் கரோனா தொற்றால் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்குடும்பத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றனர்.
இந்நிலையில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் ஆட்சியர் அண்ணாதுரையிடம் அளித்த மனுவில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.