தர ஆய்வுக்குப் பிறகே ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டும்: பொதுநல வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

தர ஆய்வுக்குப் பிறகே ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டும்: பொதுநல வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

தர ஆய்வு செய்த ரேபிட் கருவிகளை மட்டுமே கரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்த உத்தரவிடக் கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

கரோனா பரிசோதனைக்குத் தரமற்ற ரேபிட் பரிசோதனைக் கருவிகளுக்குத் தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், “வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளும், கருவிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கான உரிமம் வழங்கப்படுகிறது.

அதேபோல, கரோனா வைரஸ் பரிசோதனைக்கான ரேபிட் கருவியை இறக்குமதி செய்ய சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தவறான முடிவுகளைக் காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29-ம் தேதி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பரிசோதனைக் கருவிகளை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in