Last Updated : 18 Jun, 2020 01:24 PM

 

Published : 18 Jun 2020 01:24 PM
Last Updated : 18 Jun 2020 01:24 PM

ஊதியம் கோரி தொடர் போராட்டம்: 2 நாட்கள் விடுமுறை விட்டு அலுவலகத்தையே மூடிய புதுச்சேரி சுற்றுலாத்துறை

மூடப்பட்ட சுற்றுலாத்துறை அலுவலகம்.

புதுச்சேரி

இரு மாதங்களுக்கு ஊதியம் தராததால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அலுவலகம் இழுத்து மூடப்பட்டு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, கடந்த மே மாத இறுதியில் யாசகம் கேட்கும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி இரு மாத ஊதியம் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் மாத சம்பளம் மட்டும் கடந்த 3-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாத நிலுவை சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே, நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி, கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் போராட்டத்தைக் கடந்த வாரம் தொடங்கினர். ஊதியத்தைத் தரும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

போராட்டத்துக்கு அரசுத் தரப்பில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, அலுவலக வளாகத்தில் குடும்பத்தினருடன் கஞ்சி காய்ச்சும் போராட்டம், ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து இவ்வாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (ஜூன் 18) காலை 8-ம் நாளாக மீண்டும் போராட்டத்துக்காக ஊழியர்கள் வந்தபோது அலுவலகம் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து, கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் கஜபதி கூறுகையில், "கரோனாவால் 144 தடை உத்தரவு உள்ளது. அதனால் சாலையில் போராட்டம் நடத்த முடியாது. சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தினுள்தான் போராட்டம் நடத்தினோம். போராட்டத்துக்காக இன்று வந்தபோது சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

விசாரித்தபோது, போராட்டத்தையொட்டி இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். ஊதியம் தராமல் ஊதியத்துக்காகப் போராடுவதைத் தவிர்க்க எந்த அரசாவது அலுவலகத்தையே மூடி விடுமுறை விடுவார்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x