Last Updated : 18 Jun, 2020 12:55 PM

 

Published : 18 Jun 2020 12:55 PM
Last Updated : 18 Jun 2020 12:55 PM

கரோனா தொற்று அதிகரித்த டெல்டா மாவட்டங்கள்; சிறப்பு ரயிலை மாற்றுப் பாதையில் இயக்கக் கோரிக்கை

சென்னையிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் செங்கல்பட்டு வந்து அங்கிருந்து புறப்படும் சிறப்பு ரயிலில் சொந்த ஊர் வந்ததால் கடந்த 7 நாட்களில் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்தான் அதிக அளவில் பரவியுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் நாளை (ஜூன் 19) முதல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கனோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால், பலர் வேலையில்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என எண்ணி ஏராளமானோர் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களைப் பிடித்து செங்கல்பட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டிலிருந்து தினமும் திருச்சி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இவர்கள் பயணம் செய்து சொந்த ஊருக்கு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகங்கள் வழங்கும் இ-பாஸ் முறையில் கெடுபிடிகள் அதிகமானதால், பலர் ரயிலில் எப்படியாவது ஊருக்கு வந்துவிடலாம் என வருகின்றனர்.

அதன்படி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயிலில் வந்து இறங்குபவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு 'ஸ்வாப்' மருத்துவப் பரிசோதனை செய்து, 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினாலும், அவர்கள் வீடுகளுக்குச் சென்றதும் அறிவுரைகளை சிலர் மதிக்காமல் நடமாடுவதால் கரோனா நோய்த் தொற்று குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பரவி வருகிறது.

கடந்த 12-ம் தேதி முதல் செங்கல்பட்டு - திருச்சி இடையே சிறப்பு ரயில் (07695/ 07696) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் வருகின்றனர். அதே போல் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கும் வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்துதான் வருகின்றனர்.

ரயிலில் வந்த பெரும்பாலானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அவர்களை தஞ்சாவூர், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், நாகை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 12 -ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 133 ஆக இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து நேற்று வரை 183 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் திருவாருர் மாவட்டத்தில் 12-ம் தேதி 91 பேருக்கு இருந்த கரோனா பாதிப்பு 163 ஆக அதிகரித்துள்ளது. நாகை மாவட்டத்தில் 12 -ம் தேதி வரை 98 ஆக இருந்த கரோனா தொற்று 179 ஆக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிறப்பு ரயில் இயக்கப்பட்டதால்தான் இந்த அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்படும்போது செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயிலை இயக்குவதைத் தவிர்த்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் டி.சரவணன் கூறும்போது, "சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்தான் கரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. அங்கிருந்து ரயில் இயக்கப்பட்டதால் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கும் வந்த பயணிகள் மூலம் பரவியுள்ளது. எனவே செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலை விழுப்புரத்திலிருந்து இயக்கி மதுரை வரை நீட்டிக்கலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x