

அதிகரிக்கும் கரோனா தொற்றிலிருந்து மீள, நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க புதுச்சேரியில் 30 ஆயிரம் பேருக்கு மேல் ஹோமியோ மாத்திரைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரியிலுள்ள மத்திய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அதிகாரி ரவிக்குமார் சதர்லா தெரிவித்தார்.
மத்திய அரசின் மக்கள் தொடர்புக் கள அலுவலகம், மத்திய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புதுச்சேரியில் செயல்படும் 'அதேகொம் பின்னகம்' ஆகியன இணைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை இன்று (ஜூன் 18) காலை மூலக்குளம் மோத்திலால் நகரில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அதிகாரி ரவிக்குமார் சதர்லா கூறுகையில், "புதுச்சேரியில் இதுவரை சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு 'ஆர்சனிக் ஆல்பம் 30 சி' என்ற நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் தாமாகவே முன்வந்து நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகளை உரிய முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் எந்தவிதமான பலன்களை அளித்துள்ளன என்பதைக் கண்டறியும் ஆய்வை ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி செய்து வருகின்றோம்" என்று தெரிவித்தார்.