

கரோனா வைரஸ் குறித்த பயத்தைப் போக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மெட் சாரிடபிள் டிரஸ்ட் உறுப்பினர்களான டாக்டர்கள் இ.தேவகி, ராஜ்குமார் சண்முகம், என்.தினகரன், ஆடிட்டர் சம்பத் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் ஆயுஷ் மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது ஆயுஷ் (AYUSH) மருத்துவத்தில் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி என்று உள்ளது. இதில், அலோபதியை சேர்த்து AAYUSH என்று அழைத்தால் நன்றாக இருக்கும். கரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதனால், என்ன மாதிரியான மருந்துகள், உணவுகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், யோகா செய்ய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வைரஸ் குறித்த விழிப்புணர்வு
பொதுமக்களிடம் கரோனா வைரஸ் குறித்த பயத்தைப் போக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதிப்புக்கு ஏன் மருந்து இல்லை மற்றும் என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதைத் தெரிவிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்ல வேண்டும். ஏழை மக்களை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களின்உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும், ஆக்சிஜன் அளவையும் இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும்.
பாகுபாடு காட்ட வேண்டாம்
இதன்மூலம், அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். கூட்டம் அதிகம் சேரும்இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி கதவுகளை அமைக்க வேண்டும். ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். வசதி இல்லாத மாணவர்களுக்கு இலவசமாக இன்டர்நெட் வசதி வழங்க வேண்டும்.
முக்கியமாக, ஏழை பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.