

தொற்று நோய்ப் பிரிவில் இளம்வயது ஆரோக்கியமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
தமிழகத்தில் வேகமாக கரோனா பரவும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனியார் மத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை சில வழிகாட்டுல்களையும், கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இநு்த தனியார் மருத்துவமனைகளுடன் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், மதுரை இந்திய மருத்துவ சங்க ஒத்துழைப்புடன் இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தினர்.
மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார். முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:
தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கைகளை முறையாக சுத்தம் செய்தும், கையுறை, முகக்கவசம் அணிந்தும், மருத்துவர்கள் முழு உடைக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றை எப்படி தடுப்பது, எப்படி கையாள்வது குறித்து முறையாக ஊழியர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பயிற்சி அளிக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கைகள் கழுவுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்கள் பணியினை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது கை கால்களை சுத்தமாக கழுவியும், பாதுகாப்பு கவசங்களை மாற்றியும் செல்ல வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்று நோய் பிரிவில் இளம்வயது, ஆரோக்கியமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
மருத்துவ மனைகளில் பணியாற்றும் 60 வயதிற்கு மேலுள்ள சீனியர் மருத்துவர்கள், செவிலியர்ககளை கூடுதல் கவனத்துடன் பணி செய்ய அறிவுறுத்த வேண்டும். மருத்துவமனைக்கு வருகை புரிவோர்களுக்கு உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு என்று தனித்தனியாக பிரித்து செயல்பட வேண்டும்.
பொது பார்வையாளர்கள் நேரத்தை காலை, மாலை மற்றும் இரவு என்று பிரித்து சிகிச்சை குறித்து குறிப்பிட்ட காலநேரம் தெரிவித்து அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் பார்வையாளர்கள் காத்திருக்கும் அறைகள், உள் செல்லும் வழிகள் அனைத்து இடங்களிலும் கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 முறையாவது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 200 தனியார் மருத்துவமனைகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் சி.ஆர்.ராமசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.