கேளம்பாக்கம் முகாமில் தங்கவைப்பட்டுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்புக: நாகை எம்எல்ஏ காத்திருப்புப் போராட்டம்

கேளம்பாக்கம் முகாமில் தங்கவைப்பட்டுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்புக: நாகை எம்எல்ஏ காத்திருப்புப் போராட்டம்
Updated on
1 min read

வெளிநாட்டில் இருந்து வந்து கேளம்பாக்கம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை எம்எல்ஏவும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழர்களில் 175 பேர் கேளம்பாக்கம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் கரோனா பரிசோதனைக்கு பின்னர் 130 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டனர். எஞ்சியவர்களில் நேற்று முன் தினம் ஒருவரும், இன்று காலை ஒருவரும் வெவ்வேறு உடல் நல பிரச்சினைகளால் உயிரிழந்துவிட்டனர்.

இந்த நிலையில், முகாமில் தங்கவைப்பட்டுள்ளவர்களில் கரோனா தொற்று இல்லை என சோதனை முடிவுகள் வந்தவர்களை உடனடியாக அவரவர் வீட்டிற்கு அனுப்பி தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து, காத்திருப்பு போராட்டத்தைத் தமிமுன் அன்சாரி தொடங்கியுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் உள்ள தனது வீட்டில் இன்று காலை போராட்டத்தைத் தொடங்கிய தமிமுன் அன்சாரி ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பேசுகையில், “கேளம்பாக்கம் முகாமில் இருவர் மரணமடைந்ததற்கு அங்கு பணியில் உள்ள வட்டாட்சியரின் கவனக்குறைவுதான் காரணம். வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு வந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்கக்கூட முடியாமல் மன வேதனையில் இறக்கிறார்கள்.

இனிமேலும் இத்தகைய இறப்புகளைத் தொடர அனுமதிக்கக்கூடாது. எனவே, வெளிநாடுகளில் இருந்து திரும்புகிறவர்களை முகாமில் வைத்து, ஆய்வு செய்து அவர்களுக்குக் கரோனா இல்லை என்று தெரிய வந்தால் உடனே அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து அங்கு தனிமைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் செலவு குறையும். தேவையற்ற பிரச்சினைகளும் இருக்காது.

இதுகுறித்து அரசுக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்களிடமிருந்து பதில் வரும்வரை இந்த காத்திருப்புப் போராட்டம் தொடரும்” என்று சொன்னவர், “இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான வாரியத்தை உயிரூட்டி அதற்கு ஓர் ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதுடன் தற்காலிகமாக ஒரு அமைச்சரையும் நியமிக்க வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் தமிழர்கள் தாயகம் திரும்பக் கூடுதலான விமான சேவையைத் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். நெருக்கடியான நேரத்தில் சொந்த செலவில் தாயகம் திரும்புவர்களிடம் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்கக்கூடாது” என்றும் சொன்னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in