

மலேசியாவில் சிக்கித் தவிக்கும் தன் கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் தங்கவேல் மனைவி விஜயா ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் இன்று (ஜூன் 17) அளித்த மனு:
"எனது கணவர் ஜோதிடத் தொழிலில் உள்ளார். தொழில் நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார். இந்நிலையில், ஆன்மிகச் சுற்றுலா தொடர்பாக கடந்த மார்ச் 12-ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா சென்றார். அங்கு சென்றுவிட்டு எங்களை ஒன்றரை மாத காலம் அலைபேசியில் தொடர்பு கொண்டார். அதன் பின்னர் அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. எங்களாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவர் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு சென்றிருந்ததால், விசா காலமும் ஒரு மாதம் மட்டுமே செல்லுபடியாகும். இந்நிலையில், கரோனா ஊரடங்கு அங்கும் இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடைசியாக மே 3-ம் தேதி அலைபேசியில் தொடர்பு கொண்டோம். அப்போது சுங்க அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் எங்களுக்குச் சந்தேகம் அதிகரித்துள்ளது.
இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். ஆகவே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் எனது கணவர் தங்கவேலுவை உடனடியாக மீட்டுத் தர, ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.