மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி.
மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி.

திருப்பூர் அருகே சந்தேக மரணம்; மனித எலும்புகள் கண்டெடுப்பு: ஆய்வுக்காக எலும்புகளை சென்னை எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கும் போலீஸார்

Published on

ஊதியூர் அருகே மேல்நிலைத் தண்ணீர் தொட்டிக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, சேகரிக்கப்பட்ட எலும்புகளை சென்னைக்கு ஆய்வுக்காகக் கொண்டு செல்ல போலீஸார் காத்திருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகேயுள்ள கருக்கபாளையம் பிரிவு பகுதியில் திருப்பூரைச் சேர்ந்த சிவமுருகன் என்பவர், சில நாட்களுக்கு முன் நிலம் வாங்கி, அதை மனைகளாகப் பிரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அங்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டியுள்ளார். மனைகள் ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் விற்பனை மந்தமாகவே இருந்துள்ளதுடன், தற்போது வரை அதிக ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக அது உள்ளது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த உயரமான நீர்த்தேக்கத் தொட்டியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக ஊதியூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் ஆய்வு நடத்தினர். பிறகு காங்கேயம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சென்று எலும்புக்கூட்டைக் கைப்பற்றி பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதோடு, தொட்டிக்குள் மனித எலும்புக்கூடு அருகே முயல் பிடிக்கப் பயன்படுத்தும் சுருக்குக் கம்பிகளும் கிடந்தன. இதனால் யாரேனும் கொலை செய்து உடலைத் தொட்டிக்குள் போட்டுச் சென்றனரா அல்லது வேட்டைக்காக வந்த யாரும் தொட்டிக்குள் விழுந்து இறந்தனரா என்று சந்தேகிக்கப்பட்டது. ஊதியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென காணாமல் போனவர்கள் பட்டியலைச் சேகரித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மனித எலும்புகளை சென்னைக்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில், கரானோ தொற்று அச்சத்தால் போலீஸார் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊதியூர் போலீஸார் 'இந்து தமிழ்' இணையத்திடம் தற்போது கூறும்போது, "கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டது. இருப்பினும் இவ்வழக்கில் சேகரிக்கப்பட்ட எலும்புகளை சென்னை எடுத்துச் சென்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கரோனா பிரச்சினையால் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் காத்திருக்கிறோம். சென்னையில் ஆய்வு செய்தால் மட்டுமே வழக்கில் ஒரு நிலையை எட்ட முடியும்" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in